அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலுள்ள உணவகமொன்றில், அன்னாசிப்பழம் மற்றும் ஹாம் சேர்த்த பீட்சா தயாரிக்க மறுத்த இத்தாலிய சமையல் கலைஞர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்ப்பது தனது கலாசாரத்திற்கு அவமதிப்பானது என அவர் வாதிட்டுள்ளார்.
டாவிடே தம்புரெல்லா (Davide Tamburella) என்பவர், தற்போது மூடப்பட்டுள்ள லா கோஸ்டா (La Costa) உணவகத்தில் கடந்த மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரது பணியிட நடத்தை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நிர்வாகம் கூட்டமொன்றை நடத்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனியார் நிகழ்வொன்றுக்காக அன்னாசிப்பழம் சேர்த்த பீட்சாக்களை தயாரிக்க தம்புரெல்லா மறுத்ததே முக்கிய சர்ச்சையாக அமைந்தது. தனது கலாசார பாரம்பரியத்திற்கு முரணானதாக இருக்கும் போது, நிர்வாகத்தின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவின் Fair Work Commission-இல் தம்புரெல்லா நியாயமற்ற பணிநீக்கம் தொடர்பான முறைப்பாட்டைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று சந்தர்ப்பங்களில் பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க தம்புரெல்லா மறுத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் இத்தாலியர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஆராயுமாறு அவர் ஏற்கனவே தனது பணியளிப்பாளரிடம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சர்ச்சை அவுஸ்திரேலியாவின் வணிக ரீதியாக பயிரிடப்படும் அன்னாசிப்பழங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்யும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.










