அம்பாறை, உஹன மற்றும் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுகளில் பதிவாகிய தொடர் வீடுடைப்புத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அம்பாறை தயாபுர பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கடந்த நவம்பர் 7ஆம் திகதி 3,050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, மற்றுமொரு நபருடன் இணைந்து நீண்டகாலமாகப் பல வீடுகளை உடைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், திருடப்பட்ட மடிக்கணினி ஒன்று, நான்கு எரிவாயு சிலிண்டர்கள், பாரம்பரிய பித்தளை எண்ணெய் விளக்கு ஒன்று, இரண்டு மின்விசிறிகள் மற்றும் ஒன்பது நெல் மூட்டைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், திருடப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்தமை மற்றும் அவற்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகிக்கப்படும் இரு ஆண்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அம்பாறை ராஜவெவ, உதயபுர மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.










