அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதிய கோர விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த இரண்டு பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்து, அந்தப் பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்த சுமார் 18 முதல் 20 பேர் வரையானோர் அநுராதபுரம், வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஏனைய விடயங்களைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










