செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களை ஏனைய நாடுகளில் அமைக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாரிய வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அமெரிக்க நிறுவனங்கள் ஏனைய நாடுகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
அவ்வாறு அனுமதித்தால் சீனா அவற்றைக் கைப்பற்றிக்கொள்ளும் எனத் தெரிவித்த ட்ரம்ப், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான வரி மற்றும் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கூறினார்.
எனினும், இத்தகைய கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பது தொடர்பில் அவர் எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் வழங்கவில்லை. மேலும், இந்தத் திட்டம் குறித்து தனது அரசாங்க அதிகாரிகளுக்குக்கூட இதுவரை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, அமெரிக்க மக்கள் தங்களது சமூகங்களில் தரவு மையங்கள் அமைக்கப்படுவதை வரவேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ட்ரம்ப், அவற்றை அமைக்கும் நிறுவனங்களிடமிருந்து தங்களது சமூகங்களுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தரவு மையங்களை நிராகரிப்பதற்குப் பதிலாக, அவற்றை அமைக்கும் நிறுவனங்கள் தங்களுக்கும் தங்களது சமூகங்களுக்கும் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்புகள் உள்ளிட்ட எரிசக்தி உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்தும் இரு கட்சிகளின் ஆதரவுடனான சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டமூலம் பாரிய எரிசக்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான கால அவகாசத்தைக் குறைப்பதுடன், தரவு மையங்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும், பரந்த மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகளுக்குமான செலவுகளை ஏற்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தைப் பாராட்டிய ட்ரம்ப், இது பாரிய அளவிலான புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் அடுத்தகட்டமாக பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வரும் ட்ரம்ப், மத்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தாமதப்படுத்தினாலும், செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களை உருவாக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் கடுமையான ஒழுங்குமுறைச் சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கும் தரவு மையங்கள் தொடர்பான விவகாரம் தற்போது அமெரிக்காவில் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










