அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் இடையே வரலாற்று முக்கியத்துவமிக்க முத்தரப்புச் சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ் இதனை அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய அணுவாயுத வல்லரசுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், அணுவாயுதங்களைக் குறைப்பது தொடர்பிலேயே பிரதானமாகக் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஈரான் தொடர்பான விவகாரங்களும் கலந்துரையாடப்படலாம் எனக் கூறப்பட்டுள்ள போதிலும், உக்ரைன் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாது என அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்தோ-பசிபிக் பிராந்தியப் பயணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டுடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை (நவம்பர் 11) இரவு அவர் சீனாவின் ஷென்சென் நகரைச் சென்றடையவுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் நடைபெறும் APEC உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள அவர், வியாழக்கிழமை (நவம்பர் 12) சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
2025ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், ட்ரம்ப் மற்றும் சீ ஜின்பிங் இடையே நடைபெறும் நான்காவது சந்திப்பாக இது அமையவுள்ளது.
இந்தப் பயணத்தின் இறுதியாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான முக்கிய அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதனால், உலகின் அணுவாயுதக் கையிருப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதிய அணுவாயுதக் கட்டுப்பாட்டு கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, சீனாவின் அணுவாயுதக் கையிருப்பு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் மாத்திரமன்றி சீனாவையும் உள்ளடக்கிய விரிவான அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையொன்றை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.










