பாகிஸ்தானின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறும் அந்நாட்டின் உயர் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2026 நவம்பர் 16ஆம் திகதியிடப்பட்டு, அவரது சட்டத்தரணி பேரிஸ்டர் சல்மான் சஃப்தார் ஊடாக அனுப்பப்பட்ட திறந்த கடிதத்தில், தனது இரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் மூளையில் இரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் 74 வயதான இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
தனது இரத்த அழுத்தம் 130 என்ற அளவிலிருந்து 150, 170 என அதிகரித்ததாகவும், கடந்த நவம்பர் 10ஆம் திகதி 192 மற்றும் 193 என்ற அளவை எட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இதயமும் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“74 வயதில், இவ்வாறான தொடர்ச்சியான நிலைமை என்னை உயிருடன் மீள முடியாத ஒரு நிலைக்குக் கொண்டு செல்கிறது” என இம்ரான் கான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உயர் நீதிமன்றம், மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தலைமை நீதிபதிகளுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி அடியாலா சிறைச்சாலையில் இம்ரான் கானுக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையில் இடம்பெற்ற மூன்று மணித்தியால சந்திப்பைத் தொடர்ந்து இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
22 மணித்தியாலங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு
கடந்த 2025 டிசம்பர் 20ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் வரை தனிமைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை அணுகுவதற்கான வாய்ப்புகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடர்பில் தனது குடும்பத்தினருக்கும் சட்டப் பிரதிநிதிகளுக்கும் முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனைவியின் உடல்நிலை குறித்தும் கவலை
தனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலை குறித்தும் இம்ரான் கான் தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.
விழித்திரை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அவரது மனைவி நிரந்தரமாகப் பார்வையை இழக்கும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு
கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, விசேட மருத்துவப் பரிசோதனைகளுக்காகத் தன்னை ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்றும், குடும்பத்தினருடன் வழக்கமான சந்திப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026ஆம் ஆண்டில் தனது சட்டத்தரணியை நான்கு தடவைகள் மாத்திரமே சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும், தனது மனைவிக்கு அவரது சட்ட ஆலோசகரை ஒரே ஒரு தடவை மாத்திரமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் தனது அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாகவும், தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகளில் உரிய முறையில் தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுத்துள்ளதாகவும் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனக்கு விசேட சலுகைகளோ அல்லது அரசியல் ரீதியான அனுகூலங்களோ தேவையில்லை என்றும், உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது மாத்திரமே தனது கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“நான் உயிருடன் இருந்தால் மட்டுமே எனது நிரபராதித்துவத்தை நிரூபிக்க முடியும்” எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் புறக்கணிப்பு குற்றச்சாட்டை மறுக்கும் அரசாங்கம்
2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், பல்வேறு வழக்குகள் மற்றும் குற்றவியல் தண்டனைத் தீர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார்.
இவற்றை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என இம்ரான் கானும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
எனினும், இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் புறக்கணிப்பு இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின்படி, பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (PIMS) இம்ரான் கானுக்கு எட்டு தடவைகள் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்தப் பரிசோதனைகளில் அவரது உடல்நிலை திருப்திகரமாகக் காணப்பட்டதாகவும், இரத்த அழுத்த அளவுகளும் திருப்திகரமாக இருந்ததாகவும் குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.












