நீர் இறைக்கும் பம்பின் மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதையடுத்து, அமெரிக்காவில் 720,000க்கும் அதிகமான வாகனங்களை பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனம் மீளப்பெற நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA) தகவலின்படி, 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட BMW நிறுவனத்தின் பல்வேறு மொடல்களைச் சேர்ந்த 720,796 வாகனங்கள் இந்த மீளப்பெறல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களில் நீர் இறைக்கும் பம்புடன் இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்பான் காலப்போக்கில் சேதமடையக்கூடும் எனவும், இதனால் ஈரப்பதம் உட்புகுந்து மின்கசிவு அல்லது மின்சுற்றுக் குறுக்கீடு ஏற்படக்கூடும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரிதான சந்தர்ப்பங்களில் இக்கோளாறு வாகனங்களில் தீப்பற்றுவதற்கு வழிவகுக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மீளப்பெறல் நடவடிக்கைக்கு உட்படும் வாகனங்களில் 2014–2016 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட BMW 228i, 228xi, 428i மற்றும் 428xi மொடல்களும், 2012–2016 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட 328i, 328xi, 528i மற்றும் 528xi மொடல்களும் உள்ளடங்குகின்றன.
மேலும், 2012–2015 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட BMW X1, 2013–2017 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட X3, 2015–2018 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட X4, 2016–2018 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட X5 மற்றும் 2012–2016 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட Z4 ஆகிய மொடல்களும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அவற்றைக் கட்டடங்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளிலிருந்து விலகி, திறந்த வெளியில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னைய மீளப்பெறல் அறிவிப்புடன் இந்த நடவடிக்கை தொடர்புபட்டுள்ளதாக அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களுக்கும் மேலதிக திருத்தப் பணிகள் தேவைப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கோளாறுக்கான தீர்வை BMW நிறுவனம் தற்போது உருவாக்கி வருவதுடன், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் அறிவித்தல் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










