செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராஜ் சோமதேவவின் தடயவியல் தொல்லியல் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
குறித்த அறிக்கை மருத்துவச் சட்டவியல் (Medico-Legal) மதிப்பீடு அல்ல எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின்போது ஏனைய தடயவியல் மற்றும் விசாரணை அறிக்கைகளுடன் இணைத்தே இந்த அறிக்கையும் பரிசீலிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது சுமார் 574 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான், பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி (JMO) டொக்டர் பிரணவன் செல்லையா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் செயற்பாடுகள் சட்ட மற்றும் தடயவியல் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் (OMP) அதன் சட்டத்தின் 12(d) பிரிவின் கீழ் அவதானிப்பாளராக இந்த நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பேராசிரியர் சோமதேவ தடயவியல் மருத்துவ நிபுணர் அல்ல என்றும், அவர் மருத்துவச் சட்டவியல் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
“ராஜ் சோமதேவவுக்கு மருத்துவச் சட்டவியல் அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான தொழில்சார் தகைமை உள்ளதா என உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளீர்கள். இல்லை, அவருக்கு அந்தத் தகைமை கிடையாது. அவர் அவ்வாறான அறிக்கையொன்றை ஒருபோதும் வெளியிடவும் இல்லை.
அவர் சமர்ப்பித்திருப்பது தொல்லியல் தொடர்பான அறிக்கையாகும். மனித எச்சங்கள் எங்கு, எவ்வாறு, எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டன என்பதை ஆராய்வதே அந்தத் தடயவியல் தொல்லியல் அறிக்கையின் நோக்கமாகும். இது மருத்துவச் சட்டவியல் அறிக்கை அல்ல.
மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பான விடயங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக உரிய மருத்துவச் சட்டவியல் விசாரணைகள் மூலம் பின்னர் ஆராயப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்ற தடயவியல் அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் பிரணவன் மற்றும் அவரது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை என்பது நீதவான் பரிசீலிக்கவுள்ள பல அறிக்கைகளில் ஒன்று மட்டுமே எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
“ராஜ் சோமதேவவின் அறிக்கையை மட்டுமே நீதவான் கவனத்தில் கொள்வார் எனப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். நீதவான் ஒரு அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏனைய விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளையும் அவர் பரிசீலிப்பார்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தொல்லியல் ஆய்வு முடிவுகள் தமிழ் மக்களுக்கு எதிரானவை என்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார். இந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான விஞ்ஞானபூர்வமான தகவல்களை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட தொழில்சார் மதிப்பீடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, ராஜ் சோமதேவவின் அறிக்கையை வழக்கு ஆவணங்களில் இணைத்துக்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் நீதவான் உத்தரவிட்டதாகவும், எனினும் அந்த அறிக்கையைத் தனித்த அடிப்படையில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை நிறுவுவதற்கு அல்லது அதற்கு வசதியளிப்பதற்கு அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட தரப்பினரால் அவ்வாறான கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நீதிமன்றத்தால் அடையாளம் காணப்படும் தேவைகளுக்கு அமைய, டிஎன்ஏ பரிசோதனைகள், மனித எச்சங்களை அடையாளம் காணுதல் மற்றும் மேலதிக தடயவியல் விசாரணைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு சர்வதேச தொழில்நுட்ப மற்றும் தடயவியல் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் நாம் விரும்புகின்றோம். அதற்காக முறையான விஞ்ஞானபூர்வமான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் இனம், மதம், சாதி ஆகியவற்றுக்கு இடமில்லை. அரசாங்கமும் அவ்வாறான கண்ணோட்டத்தில் சிந்திக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி விசாரணைகளை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்ட அமைச்சர், உண்மையைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக விஞ்ஞானபூர்வமான மற்றும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட விசாரணை முன்னெடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“போதும், அரசியல் இலாபத்திற்காக இன முரண்பாடுகளைப் பயன்படுத்துவது பழைய அரசியல் நடைமுறையாகும். நீங்கள் அவ்வாறு செய்கிறீர்கள் என்று நான் கூறவில்லை. ஆனால், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவைக் காண்பதற்கும் நாம் இதனை விஞ்ஞானபூர்வமாகவும் முறையாகவும் முன்னெடுப்போம்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.










