பாகிஸ்தானின் லாகூரில் தனியார் பண்ணை ஒன்றில் டிக்டொக் காணொளி படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர், காட்டு விலங்கின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகப் பிரபலம் ஒருவரும் பண்ணையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தல்ஹா என அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞர், லாகூரின் கஹ்னா பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு சமூக ஊடகக் காணொளியொன்றைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பண்ணைக்கு காணொளி பதிவுசெய்வதற்காகச் சென்ற டிக்டொக் பிரபலமான நௌமான் ஹசன், அந்த விலங்கைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த விலங்கு இளைஞரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாகத் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் டிக்டொக் பிரபலமான நௌமான் ஹசனையும் பண்ணையின் உரிமையாளரான ஃபயாஸ் என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், நாயொன்றின் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பொலிஸ் விசாரணைகளில் அவர் பெரிய காட்டு விலங்கொன்றின் தாக்குதலுக்கு இலக்காகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த விலங்கு பஞ்சாப் வனவிலங்கு திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பண்ணையில் குறித்த விலங்கை வளர்ப்பதற்கான உரிய அனுமதிப்பத்திரங்கள் இருந்தனவா, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், சம்பவத்தில் அலட்சியம் இடம்பெற்றுள்ளதா மற்றும் உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த லாகூர் பொலிஸ் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பைசல் கம்ரான், பொழுதுபோக்கிற்காகவோ சமூக ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவதற்காகவோ மனித உயிர்களை ஆபத்தில் ஆழ்த்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சமூக ஊடகக் காணொளிகளைத் தயாரிப்பதற்காக ஆபத்தான காட்டு விலங்குகள் பயன்படுத்தப்படுவது மற்றும் தனியார் வனவிலங்கு பண்ணைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்தச் சம்பவம் மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.










