அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம், நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அலையில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொருவரையும், அவரை காப்பாற்ற சென்ற வேளை அலையில் அடித்துச் செல்லப்பட்டவரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐந்து மாணவர்கள் நேற்று மதியம் நிந்தவூர் கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக ஒருவர் திடீரென கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலாம் அப்துல்லா ஆபித் (வயது 17) என்பவர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டு, அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முகமது அன்வர் ஆத்திப்(வயது 18) என்பவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டதுடன், அவரை காப்பாற்ற முயன்ற நௌவ்சாத் ஹபுனத் (வயது 23) என்பவரும் அலையின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மீட்புக் குழுவினரால் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கடலின் நீரோட்டம் அக்கரைப்பற்று திசையை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுவதால். ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் உள்ளிட்ட தென்கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், கடலுக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.









