-ச.சந்திரபிரகாஷ்-
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவரை காணவில்லை என, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கறுவப்பன்கேணி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பாலசிங்கம் சுதர்சினி (வயது-35) என்பரே கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதியில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்ப உறுப்பினர் ஒருவர் எம்மை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்தார்.
இவர் காணாமல் போனவிடயம் தொடர்பாக பல கோணங்களில் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இதுவரை காலமும் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் உதவியோடு இவரை தேடும் முயற்சியை நாடியுள்ளனர்.
மேலும் இவரின் பாவனையில் இருந்த கையடக்க தொலைபேசியும் காணாமல் போன தினத்தில் இருந்து செயழிந்து போயுள்ளதாகவும், இதுவரையில் எவ்வித தொடர்புகளும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரியவருகின்றது.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், அல்லது இவரை எங்காவது கண்டால் 0775928589 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசில் ஆகஸ்ட் 11ஆம் திகதி முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இதுவரை இவரைப்பற்றி எவ்வித தகவல்களும், தமக்கு கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.









