அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தொடர்பாடல் கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு நாடு முழுவதும் புறப்படவிருந்த விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிசோதித்து, விமானப் பயணங்களைப் பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிக்க முடியும் என உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நாடு தழுவிய விமானப் புறப்பாட்டுத் தடையை நீக்கியது.
இந்தத் திடீர் முடக்கம் அமெரிக்கா முழுவதிலுமுள்ள விமான நிலையங்களைப் பாதித்ததுடன், விமான சேவைகளில் பாரிய இடையூறுகளையும் ஏற்படுத்தியது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புத் தரவுகளின்படி, இந்தத் தடையால் 10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்துள்ளதுடன், 1,400க்கும் அதிகமான விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
அமெரிக்கா முழுவதும் விமானங்களைக் கட்டுப்படுத்தும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களின் தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, காலாவதியான விமானப் போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் அதிக சுமைக்கு உள்ளான பழைய தொடர்பாடல் உபகரணங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த இடையூறு இணையவழித் தாக்குதல் அல்லது திட்டமிட்ட வேறு ஏதேனும் நடவடிக்கையால் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான நாடு தழுவிய இடையூறுகளில் ஒன்றாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
இதற்கு முன்னர், 2023 ஜனவரியிலும் FAA விமானிகளுக்கான அறிவித்தல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமானப் புறப்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், விமானங்கள் மற்றும் பணியாளர்களை உரிய இடங்களுக்கு மீளக் கொண்டுசென்று வழக்கமான அட்டவணையைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் காரணமாக, மேலும் சில தாமதங்களும் விமான இரத்துகளும் ஏற்படக்கூடும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்தச் சம்பவம், அமெரிக்காவின் பழமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உட்கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் அதனை நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த கவலைகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.










