அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் துறைமுகத்திற்கு அருகில் மிசிசிப்பி ஆற்றில் எண்ணெய் தாங்கி கப்பல் மோதியதில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில், கட்டப்பட்டிருந்த பயணிகள் படகுடன் கட்டுப்பாட்டை இழந்த Atlantic Asphalt என்ற தாங்கிக் கப்பல் மோதியதையடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் இடம்பெற்றபோது American Heritage என்ற சுற்றுலாப் பயணிகள் கப்பலில் சுமார் 200 பேர் இருந்ததாக நியூ ஓர்லியன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதனை ஒரு அதிசயமான மீட்பு நடவடிக்கை என நியூ ஓர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ வர்ணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 30 பயணிகளும், ஆற்றில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பாரதூரமற்ற காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் சிறுவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றவுடன் பயணிகள் படகிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். எனினும், மோதலின் பின்னர் American Heritage படகு நீரில் மூழ்கத் தொடங்கியதுடன், பின்னர் ஒருபுறமாகச் சரிந்து கவிழ்ந்துள்ளது.
இதன்போது படகில் எஞ்சியிருந்த சிலர் ஆற்றில் விழுந்ததையடுத்து, உடனடியாக அவசரகால மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மேயர் ஹெலினா மொரேனோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.










