திவுலப்பிட்டிய, வாவகெதர பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஏற்றுமதிக்காகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பழைய மின்னணு உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவலின்படி, ஏற்றுமதி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட பழைய மின்னணு உபகரணங்களைச் சேகரித்து களஞ்சியப்படுத்தும் நிலையத்திலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, திவுலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, களஞ்சியசாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய மின்னணு உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதுடன், சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை விமானப்படை, இலங்கை இராணுவம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் திவுலப்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் களஞ்சியசாலைக்கும் அதிலிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










