அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சுமார் 7,000 வைத்தியர்களை சுகாதார சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் உயிரிழந்த அதிகாரிகள் குறித்த தகவல்களை ஆராய்ந்து இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவையை முறையாகப் பேணிச் செல்வதற்குத் தேவையான ஊழியர்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை பணியாளர் கட்டமைப்பில் (Cadre) எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வைத்தியசாலைகளில் புதிய அலகுகள் நிறுவப்பட்டு வைத்தியசாலை கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்ட போதிலும், முறையான பணியாளர் கட்டமைப்பு முறைமை இன்மையால் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதில் தடைகள் காணப்பட்டதாக அவர் மேலும் விளக்கினார்.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக கடந்த சில மாதங்களுக்குள்ளாக விஞ்ஞானபூர்வமான பணியாளர் கட்டமைப்பை பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அது தொடர்பான அனைத்துத் தகவல்களும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 2027, 2028 மற்றும் 2029 ஆகிய எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குத் தேவையான சுகாதாரத்துறைக்கான ஊழியர் அனுமதியைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மருத்துவ பீடங்கள் உள்ளன.
அங்கு சுமார் 12,000 மாணவர்கள் தற்போது மருத்துவப் பட்டத்தைப் பயின்று வருகின்றனர். எவ்வாறாயினும், நாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த வைத்தியர்கள், விசேட வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்களின் எண்ணிக்கை 25,000 அளவில் உள்ள பின்னணியில், மேலும் 12,000 பேர் கல்வி பயின்று வருவது சதவீத அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஒரு மட்டமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுக் கூறினார்.
இடைக்காலப் பயிற்சியை பூர்த்தி செய்யும் மருத்துவப் பட்டதாரிகளில் பெரும்பாலானோரை அரச சேவையில் உள்ளீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்கள் தனியார் துறையில் சேவையாற்றவோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லவோ வாய்ப்புள்ளதாகவும், 2017 ஆண்டில் இருந்த பழைய பணியாளர் கட்டமைப்பு வரையறைகள் காரணமாக இடைக்கால பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கு முதல் நியமனங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்கள் எதிர்காலத்தில் புதிய முறைமை ஊடாகத் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.










