கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு சோதனை நடவடிக்கைகளின்போது, 13 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவலின்படி, இன்று திங்கட்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் வருகை முனையத்தில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 4 கிலோ 336 கிராம் மற்றும் 4 கிலோ 328 கிராம் குஷ் போதைப்பொருட்களைத் தனித்தனியாக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையின்போது, 4 கிலோ 384 கிராம் குஷ் போதைப்பொருளுடன் மற்றுமொருவர் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த மூன்று சோதனை நடவடிக்கைகளிலும் மொத்தமாக 13 கிலோ 48 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 30, 35 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே மாத்தளை, நெடுங்கேணி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.










