ஹிக்கடுவை-நாரிகம கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 71 வயதுடைய ஜேர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நாரிகம கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கடலில் ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிக்கிய அவர், கரையிலிருந்து தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயற்பட்டு அவரைக் கடலிலிருந்து மீட்டு, சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த ஜேர்மன் பிரஜை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










