இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது தேசிய மாணவர் படையணியின் (NCC) சைக்கிள் பயணமான ‘மைத்ரி சேது யாத்திரை’ நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் பயணத்தில் 24 மாணவர் படையணி உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி வரை சுமார் 3,500 கிலோமீற்றர் தூரத்தை சைக்கிளில் பயணிக்கவுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, இந்திய தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வத்ஸ் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இளம் மாணவர் படையணி உறுப்பினர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகிய பண்புகளை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.









