அநுராதபுரம், ரம்பேவ – வெலிஓயா சந்திக்கு அருகில் கடந்த நவம்பர் 10ஆம் திகதி இடம்பெற்ற மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்த நான்கு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, ஐந்து நாட்களாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 பிரதான வீதியில் பயணித்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து, அவற்றில் ஒரு பேருந்தின் பின்புறத்தில் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மொத்தமாக 76 பயணிகள் காயமடைந்து அநுராதபுரம், மதவச்சி மற்றும் மிஹிந்தலை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 51 பேர் தொடர்ந்தும் அநுராதபுரம் மற்றும் மதவச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









