ஹொரவ்பொத்தானை பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுமி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2026 செப்டெம்பர் 24ஆம் திகதி, இஹல கும்புக்கொல்லேவ பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபரின் மரணம் தொடர்பான காரணங்களைக் கண்டறிய ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின்போது, குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதற்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் 17 வயதுடைய சிறுமி ஒருவரும், 23 மற்றும் 26 வயதுடைய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் இஹல கும்புக்கொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அதே பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், கொலைக்கான காரணம், சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









