சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஹூதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தருணத்தைப் பதிவு செய்த புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அல் அரேபியா ஊடகம் வெளியிட்டுள்ள குறித்த காட்சிகளில், விமானங்களில் ஏறுவதற்குத் தயாராக இருந்த உம்ரா யாத்திரிகர்கள் உள்ளிட்ட பயணிகள் விமான நிலைய முனையத்தில் காத்திருந்தபோது வெடிப்புச் சம்பவம் இடம்பெறுவது பதிவாகியுள்ளது.
திடீரென ஒளிப்பிழம்பு தோன்றுவதையும், அதன் பின்னர் கட்டடப் பகுதிகளிலிருந்து சிதைவுகள் விழுவதையும், பயணிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுவதையும் காணொளியில் காண முடிகிறது.
இந்தத் தாக்குதலில் ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 309 பேர் காயமடைந்ததாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், தாக்குதலில் காயமடைந்த இந்தியப் பிரஜை ஒருவர் பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு யேமனின் ஹூதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், சர்வதேச விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் குறித்த விமான நிலையம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை: வெளியிடப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் பார்வையாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.










