பொலிஸ் காவலில் உயிரிழந்த ஹோமாகம இளைஞரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பௌத்த பிக்கு ஒருவர், குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இளைஞரின் இறுதிக்கிரியைகளில் உரையாற்றிய அவர், ‘ஐக்கிய தேசத்திற்கான வேலைத்திட்டம்’ (A Nation United Programme) என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகத் தெரிவித்தார்.
“இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி உள்ளிட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். இந்த விடயத்திற்கு விரைவாகத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தினேன்” என அவர் குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வின்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் (OIC) இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், கவலைக்குரிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததாகவும் பிக்கு தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞருடன் தொடர்புடைய மற்றுமொருவரும் இதேபோன்ற சூழ்நிலையில் தாக்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குருசிங்கே எனப்படும் அதிகாரி, பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் அப்பகுதி மக்களைத் தாக்கியுள்ளதாகவும், இத்தகைய தாக்குதல்களால் பலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரே தவிர, பொதுமக்களைத் தாக்குவதற்காக அல்ல எனக் குறிப்பிட்ட பிக்கு, பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்களைத் தடுக்கத் தவறியமைக்காக பொலிஸ் திணைக்களத்தையும் அரசாங்கத்தையும் விமர்சித்தார். அத்துடன், பொலிஸ் திணைக்களம் பாரபட்சமாகச் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பொலிஸ் காவலில் உயிரிழந்த இஷார ஹர்ஷ குமார முதலாவது நபரும் அல்ல, இவ்வாறான சூழ்நிலையில் உயிரிழக்கும் இறுதி நபராகவும் இருக்கமாட்டார் எனக் குறிப்பிட்ட அவர், வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த பதுளையைச் சேர்ந்த இளைஞரின் சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகியிருக்காவிட்டால், இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் பிக்கு தெரிவித்தார்.
அத்துடன், திடீர் சுகவீனம் காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தையும் அவர் விமர்சித்தார்.
சில பொலிஸ் அதிகாரிகள் சிறிய தொகைப் பணத்திற்காகத் தமது நேர்மையை விற்பனை செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் 1,000 அல்லது 2,000 ரூபாவிற்கும் தங்களை விற்றுக்கொள்ளும் பொலிஸ் படையொன்று எம்மிடம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், பொலிஸ் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படையாகப் பேசுவதால் தமக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இறுதியாக, இஷாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய பிக்கு, பொலிஸ் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பு: இச்செய்தியில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இறுதிக்கிரியை ஒன்றில் பௌத்த பிக்குவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமேயாகும்.










