யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கடல் மார்க்கமாக வெற்றிகரமாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவு மக்களின் நீண்டகாலத் தேவையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டு எரிபொருள் பவுசர் வாகனங்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கப்பல் மூலம் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளது.
இதுவரை நெடுந்தீவில் நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால், அப்பகுதி மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறிகாட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அதிக போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொண்டனர்.
இந்தச் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
குறித்த திட்டத்திற்கான ஒப்பந்தம் 2025 ஒக்டோபரில் குறிகாட்டுவான் இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகளின்போது கைச்சாத்திடப்பட்டது. இதற்கான அடிக்கல் 2026 ஜூலை மாதம் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் உள்ளிட்ட தீவு மக்களுக்கு இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அவசர மருத்துவச் சேவைகளுக்கு ஆதரவளித்தல், மீன்பிடி நடவடிக்கைகளை இலகுபடுத்துதல் மற்றும் தீவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த நிலையம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










