அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆறு உறுப்பினர்களும், எதிராக நான்கு உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். மற்றுமொரு உறுப்பினர் வெளிநாட்டில் இருப்பதால் அமர்வில் சமூகமளிக்கவில்லை.
இதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியதுடன், ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலான உப தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதன்போது உரையாற்றிய தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், பிரதேச சபையின் உன்னதமான நோக்கம் மக்களுக்குத் தேவையான சேவைகளையும் வசதிகளையும் வழங்குவதாகும் எனத் தெரிவித்தார்.
கட்சிப் பேதங்களுக்கு அப்பால் ஊரின் அபிவிருத்திக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து மக்களின் தேவைகளுக்காக கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சபையின் தவிசாளராகத் தான் தனித்து முடிவுகளை எடுத்து செயற்படுவதைவிட, ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் சபையை வழிநடத்துவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளின் வேறுபாடுகள் சபையின் மக்கள் சேவைக்குத் தடையாக அமையக்கூடாது எனவும், உறுப்பினர்கள் தங்களுக்கிடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொண்டு நிந்தவூர் மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்மையில் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற சோகமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய தவிசாளர், அவசர அனர்த்த நிலைமைகளின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வசதிகளைப் பிரதேச சபை கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக, நீரில் மூழ்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உயிர்காக்கும் பாதுகாப்பு அங்கிகளை உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கான தீர்மானம் ஏற்கனவே கடந்த மாத சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், அதன் நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, அதனை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், அவசர மீட்புப் பணிகளுக்கு படகொன்றின் தேவையும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு சபையால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
நிந்தவூரின் துப்புரவுப் பணிகள், வீதி விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், மக்களுக்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்தும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சபைக்குள் அவ்வப்போது ஏற்படக்கூடிய கருத்து முரண்பாடுகளைப் பெரிதுபடுத்தி உறுப்பினர்களிடையே பிளவுகளை உருவாக்குவதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை எனக் குறிப்பிட்ட தவிசாளர், அவற்றை சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொண்டு மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.










