இலங்கையின் முதலாவது உத்தியோகபூர்வ ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் செயல்விளக்கம் இன்று புதன்கிழமை கொழும்பு துறைமுக நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க குறித்த ட்ரோனில் பயணம் செய்து அதன் செயற்பாட்டை நேரடியாகப் பரிசோதித்துள்ளார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
ட்ரோனில் பயணம் செய்த அனுபவம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, தரையிறங்கிய பின்னர், “நான் பறப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ட்ரோன்கள் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான வர்த்தக ரீதியான சேவைகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசரகால சேவைகளுக்காக மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கும் விமானங்களை (eVTOL) அறிமுகப்படுத்துவது தொடர்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் சீனாவின் பயணிகள் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான Yi Hang நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்டமாக, கொழும்பு துறைமுக நகரில் ஆறு மாதங்களுக்கு பரீட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் வர்த்தக ரீதியான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சார்த்தத் திட்டத்திற்காக இரண்டு பயணிகள் பயணிக்கக்கூடிய E216 ரக பயணிகள் ட்ரோன் அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் 16 உந்துவிசிறிகள் (Propellers), 12 மின்கலத் தொகுதிகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய கணினி முறைமை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விமானி இல்லாமல் இயங்கும் இந்த விமானம், மத்திய கட்டுப்பாட்டு நிலையமொன்றின் ஊடாகத் தொலைவிலிருந்து இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகள் அல்லது தொடர்பாடல் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தானாகவே செயற்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை விமானப்படை, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு மற்றும் சுற்றுலா, முதலீட்டுத் துறைகளுடன் தொடர்புடைய அதிகார சபைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அவசியமாகவுள்ளது.










