இலங்கைக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பயணி ஒருவர், படகில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரைக் கடலுக்குள் தள்ளிவிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், இலங்கையில் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவைச் சேர்ந்த ஒருவர், தண்ணீர் அருந்திக்கொண்டிருந்த ஆண் சுற்றுலா வழிகாட்டியை திடீரென கடலுக்குள் தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியிடம் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டேனியல் அம்ராம் (Daniel Amram), குறித்த சுற்றுலாப் பயணிகளின் விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.
அவரது தகவலின்படி, குறித்த சம்பவம் வெறுமனே நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், சுற்றுலா வழிகாட்டியும் அதில் பங்கேற்றிருந்ததாகவும் சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வழிகாட்டியை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும், அவர் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
“இது ஒரு நகைச்சுவைச் செயல். அந்தப் பணியாளர் நலமாக இருக்கிறார். அவரைத் துன்புறுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை” என அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காணொளி பரவியதைத் தொடர்ந்து தங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் இராணுவத்தில் இணைகிறோம். நாங்கள் நல்ல பிள்ளைகள். இத்தகைய வெறுப்புப் பிரசாரத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த சம்பவம் தொடர்பான காணொளியும், அதற்கு சுற்றுலாப் பயணிகள் வழங்கியுள்ள விளக்கமும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.










