மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று பிரதேச மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மக்கள் சந்திப்பு அலுவலகம் செங்கலடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய அமைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் சந்திப்பு அலுவலகம், பிரதேச மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றை உரிய நிர்வாக மட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு தளமாகச் செயற்படவுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற அலுவலகத் திறப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்து கொண்டு, பிரதேச மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
ஏறாவூர் பற்று பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள், அபிவிருத்தி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதேச சபை, மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் மற்றும் பாராளுமன்றம் உள்ளிட்ட உரிய தளங்கள் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும், செங்கலடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் ஊடாக ஏறாவூர் பற்று பிரதேச மக்களை மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் செங்கலடி வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஆலய நிர்வாகத்தினர், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தங்களது பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் கையளித்ததுடன், அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் சந்திப்பு அலுவலகம் தொடர்ச்சியாகச் செயற்படுவதன் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










