செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
2015 ஜூலை 17ஆம் திகதி முதல் 2016 ஜூலை 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான தண்டனை அறிவிப்பு எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையத் தாக்கல் செய்திருந்தது.
செல்லுபடியாகும் விசா இன்றி வெவ்வேறு காலப்பகுதிகளில் இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தவறான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கியிருந்தன.
2025 ஒக்டோபரில் வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, டயானா கமகே இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து குற்றமற்றவர் எனத் தெரிவித்திருந்தார்.
2024 மே 8ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தொடர்ந்து இந்தச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. செல்லுபடியாகும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பிரித்தானியப் பிரஜையான டயானா கமகே, இதனைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்திருந்தார்.










