டுபாயிலிருந்து இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், தனது சேவைத் துப்பாக்கி மற்றும் 30 உயிருள்ள தோட்டாக்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவொன்றுக்கு விற்பனை செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, குறித்த சந்தேகநபர் 2025 பெப்ரவரி 8ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலப்பகுதியில், கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
அரச கடமைகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விற்பனை செய்துவிட்டு, அவர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஹலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.










