ரயிலின் அடியில் சிக்கிய காயமடைந்த பெண் இராணுவ வீராங்கனையை மீட்பதற்காகத் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ரயிலின் அடியில் தவழ்ந்து சென்று மீட்ட நபரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன பாராட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 18ஆம் திகதி ஹோமாகம, கோடகம பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இளம் பெண் இராணுவ வீராங்கனையை மீட்ட சிந்தக கமகே, நேற்று புதன்கிழமை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியைச் சந்தித்துள்ளார்.
ரயிலின் அடியில் சிக்கியிருந்த காயமடைந்த வீராங்கனையை மீட்பதற்காக, தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் சிந்தக கமகே ரயிலின் அடியில் தவழ்ந்து சென்றதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியுடன் அவர் நின்றுவிடாமல், காயமடைந்த வீராங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வரை அவருடன் இருந்து, உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, சிந்தக கமகேவின் அசாதாரண துணிச்சல், கருணை மற்றும் தன்னலமற்ற செயற்பாட்டை இராணுவத் தளபதி பாராட்டியுள்ளார். அவசர நிலைமையொன்றில் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற எவ்வித தயக்கமுமின்றி முன்வருவது உயரிய மனிதாபிமானப் பண்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரின் துணிச்சலான தீர்மானம் மற்றவர்களின் வாழ்க்கையில் எத்தகைய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை சிந்தக கமகேவின் செயல் எடுத்துக்காட்டுவதாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முன்மாதிரியான செயற்பாடுகள் சமூகத்திற்கு உந்துசக்தியாக அமைவதுடன், துணிச்சல், கருணை மற்றும் மனிதநேயப் பண்புகளை ஊக்குவிப்பதாகவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.










