மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு-வாழைக்காலை பிரதேசத்தில், “கோபு வாள்வெட்டு குழு” எனப்படும் வான்வெட்டுக்குழுவின் தாக்குதலை கண்டித்தும், வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞனுக்கு நீதி கோரியும், நேற்று புதன்கிழமை பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோபு வாள்வெட்டு குழுவினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வவுணதீவு வீதி சுற்றுவட்டத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“கோபுவின் இந்த இரத்த வேட்டைக்கு முடிவில்லையா”, “கோபு வாள் வெட்டுக்குழு ஒழிக”, “கோபுவின் பயங்கரவாதம் ஒழிக”, “கோபுவின் கசிப்பு கள்ள மண் கொள்ளையை தடுத்து நிறுத்து” என சுலோகங்கள் ஏந்தியவாறு, “பொலிசாரே நீதி வேண்டும்” என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரவழைத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபு வாள் வெட்டுக் குழுவினரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளதாகவும், கோபு தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், தெரிவித்தார்.
கோபு வாள் வெட்டுக்குழுவை இல்லாமல் செய்யுமாறு கோரி மகஜர் ஒன்றை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.










