நேபாளத்தின் எவரெஸ்ட் மலைப் பிராந்தியத்தில் தரையிறங்க முயன்றபோது இரு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சோலுகும்பு மாவட்டத்திலுள்ள பெரிச்சே (Pheriche) ஹெலிகொப்டர் இறங்குதளத்தில் இடம்பெற்றுள்ளது. எவரெஸ்ட் அடிவார முகாமுக்குச் செல்லும் மலையேற்றப் பயணிகள் மற்றும் மலையேறுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடமாக இது விளங்குகிறது.
நேபாள பொலிஸாரின் தகவலின்படி, ஃபிஷ்டெயில் எயார் (Fishtail Air) மற்றும் எயார் டைனஸ்டி (Air Dynasty) நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் உள்ளூர் நேரப்படி காலை 8.11 மணியளவில் மோதியுள்ளன.
தரையிறங்கும் முயற்சியின்போது இரு ஹெலிகொப்டர்களினதும் சுழலி இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சுற்றுலாப் பயணி ஃபிஷ்டெயில் எயார் ஹெலிகொப்டரில் பயணித்தவர் எனவும், அவர் வசந்த் குமார் என்ற இந்தியப் பிரஜை எனவும் நேபாள ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.
இந்த விபத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த பயணி ஒருவரும், எயார் டைனஸ்டி ஹெலிகொப்டரின் விமானியான கெப்டன் ரவீந்திர பிரஜாபதியும் காயமடைந்துள்ளனர். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக காத்மாண்டுவிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஃபிஷ்டெயில் எயார் ஹெலிகொப்டரை கெப்டன் பிரஜ்வல் கே.சி. செலுத்தியதுடன், எயார் டைனஸ்டி ஹெலிகொப்டரை கெப்டன் பிரஜாபதி இயக்கியுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அவசரகால மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஏனைய ஹெலிகொப்டர்களும் உதவியுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 4,000 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பெரிச்சே, எவரெஸ்ட் அடிவார முகாமுக்குச் செல்லும் மலையேற்றப் பாதையிலுள்ள இமயமலைக் குடியிருப்பாகும்.
வீதிப் போக்குவரத்து வசதிகள் குறைவாக அல்லது இல்லாத இந்தத் தொலைதூரப் பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காயமடைந்த மலையேறுபவர்களை ஏற்றிச் செல்வதில் ஹெலிகொப்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நேபாளத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் எவரெஸ்ட் பிராந்தியத்திற்கு வருகை தரும் பரபரப்பான இலையுதிர் கால மலையேற்றப் பருவத்தின்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த ஹெலிகொப்டர் மோதல் தொடர்பாக நேபாள விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துக்கான துல்லியமான காரணங்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










