இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுப் பரவல் அதிகரித்து வருவது குறித்து தேசிய பாலியல் தொற்றுநோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.
தேசிய பாலியல் தொற்றுநோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் மாதவி குணரத்ன தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே 88 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எனவும், இது குறித்த வயதுப் பிரிவில் பதிவான மொத்த தொற்றாளர்களில் சுமார் 89 சதவீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இலங்கையில் மொத்தம் 708 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 1987ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி தொற்று பதிவானது முதல், 2026 செப்டெம்பர் மாத இறுதிவரை மொத்தம் 8,111 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










