ஹங்வெல்ல-களுஅக்கல பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம், 500 மில்லிலீற்றர் குடிநீர்ப் போத்தலொன்றை நிர்ணயிக்கப்பட்ட 80 ரூபா விலையை விட 20 ரூபா அதிகமாக, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பான வழக்கு, கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி, ஹங்வெல்ல, களுஅக்கல பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த விலைமீறல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எந்தவொரு விற்பனை நிலையத்திலும், சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை நினைவூட்டியுள்ளது.
பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் விலைகளைச் சரிபார்க்குமாறும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக விற்பனை ரசீதுகளைப் பாதுகாத்து வைத்திருக்குமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விலை நிர்ணய விதிமுறைகளை உறுதிப்படுத்தவும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாடளாவிய ரீதியில் சோதனைகளும் விசாரணைகளும் தொடரும் என அதிகார சபை தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் முறைப்பாட்டு அவசர இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










