கெஸ்பேவ – கொழும்பு வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பேருந்து சாரதி ஒருவரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர், 120ஆம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் ஹொரணை – கொழும்பு சொகுசுப் பேருந்தைச் செலுத்திச் சென்றபோது, கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்தின் முன்பக்க வலது மூலையில் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் மெட்ரோ பேருந்தின் வலது பக்கக் கண்ணாடியும் அதற்குக் கீழே அமைந்திருந்த ஜன்னல் ஒன்றும் சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 342,000 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கண்காணிப்பு கமரா (CCTV) காட்சிகளிலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை, பொக்குணுவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவரை ஒக்டோபர் 10ஆம் திகதி பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










