சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பௌத்த பிக்குகள் தலைமையிலான எதிர்ப்புப் பேரணி இன்று சனிக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகுல் மடுவில் விசேட மத வழிபாடுகளும் ஆசீர்வாத நிகழ்வும் இடம்பெற்றன.
இதன்போது உரையாற்றிய உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் தன்னிச்சையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
நாடு, தேசம் மற்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவே ஞானசார தேரர் குரல் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், வரலாற்றில் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிய வண. வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரின் செயற்பாடுகளுடன் ஞானசார தேரரின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பேசினார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகிலும், வண. வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலும் ஆரம்பமான இந்தப் பேரணி, ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், பொதுமக்களையும் அமைதியான முறையில் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.










