உலகில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாக இருக்கிறது.
2026-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பிரஜைகள் என தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 94 பிரஜைகளுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது.
அதே போன்று, இந்த காலப்பகுதியில், அந்நாட்டில் மொத்தமாக 175 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் மொத்தமாக 108 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய சவுதி மனித உரிமைகள் அமைப்பு (European Saudi Organisation for Human Rights) ஆவணப்படுத்தி உள்ளது.
இவ்வாறு இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் எத்தியோப்பியா, பாகிஸ்தான், சூடான், யேமன்இ சிரியா, ஜோர்டான், சோமாலியா, எகிப்து, நைஜீரியா, பெனின், ஈராக், குவைத், கென்யா, உகாண்டா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக என ஐரோப்பிய சவுதி மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முக்கிய சந்தர்ப்பங்கள்
03 எத்தியோப்பியப் பிரஜைகள் – ஏப்ரல் 21
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த மூவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சு அறிவித்தது. அவர்கள் கஞ்சா வகையைச் சேர்ந்த போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் சட்டத்தரணிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான அணுகல் உள்ளிட்ட நியாயமான விசாரணை உரிமைகள் மறுக்கப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
05 எத்தியோப்பியர்கள் – ஜூன் 23
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மேலும் ஐந்து எத்தியோப்பியப் பிரஜைகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. இவர்களில் சிலர் யேமன் வழியாக சவுதிக்குள் நுழைந்தவர்கள் என்றும், தாங்கள் எடுத்துச் சென்ற பொருள் போதைப்பொருள் என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அவர்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அந்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியிருந்தது.
எகிப்தியப் பிரஜை – ஜூலை 18
அப்துல் ரஹீம் இப்ராஹிம் அப்துல் ரஹீம் சாலிஹ் தர்விஷ் என்ற எகிப்தியப் பிரஜை, போதை மாத்திரைகளைக் கடத்திய குற்றச்சாட்டில் தபூக் பகுதியில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சின் அறிவிப்பை மேற்கோள்காட்டி சி.என்.என் அரபிக் (CNN Arabic) செய்தி வெளியிட்டது.
05 எத்தியோப்பியப் பிரஜைகள் – ஜூலை 27
கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் மேலும் ஐந்து எத்தியோப்பியப் பிரஜைகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. இதன் மூலம் 2026ஆம் ஆண்டில் ஜூலை 27ஆம் திகதி வரை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட எத்தியோப்பியர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது.
03 எத்தியோப்பியப் பிரஜைகள் மூவர் – ஒக்டோபர் 7
செனி ரெடி அகுஸ் கொர்ஸ்கோர், ஷனாபி டெகாய் அன்பாயே பரா, மெர்சு நெகுஸ் அகாலு ஆகிய மூன்று எத்தியோப்பியப் பிரஜைகளுக்கு அசீர் பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அதிகாரிகளின் அறிவிப்பை மேற்கோள்காட்டி அஜெல் (Ajel) செய்தி வெளியிட்டது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டன.
02 பங்களாதேஷ் பிரஜைகள் – ஒக்டோபர் 14
நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பாசிர் மற்றும் சித்தி அக்தர் என அடையாளம் காணப்பட்ட இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு, மக்கா பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்களுக்குத் தகவல் வழங்கப்படவில்லை என ஜித்தாவிலுள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகம் தெரிவித்ததுடன், சவுதி அதிகாரிகளிடம் விளக்கமும் கோரியுள்ளது.
2026ஆம் ஆண்டில் வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் தான் அதிகமாக காணப்படுகின்றது.
எனினும், சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் முறையான மேன்முறையீட்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது. இதனால், அவர்கள் தங்களது பக்க நியாயங்களையோ, வாதங்களையோ எடுத்துரைக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பங்களாதேஷ் பிரஜைகள் இருவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்களுக்குத் தகவல் வழங்கப்படவில்லை என அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல்கள் முறையாக வழங்கப்படாமை மற்றும் தமது நாட்டு பிரஜைகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் என்ன என்பது தொடர்பான தெளிவான விளக்கம் வழங்கப்படாமை குறித்து பாதிக்கப்பட்ட பிரஜைகளின் நாட்டு அதிகாரிகள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை சவுதி அரேபியாவில் இந்த ஆண்டில் மரண தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் அந்த தண்டனை ரத்துச் செய்யப்பட்ட ஒரே ஒரு சம்பவமாக, இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் வழக்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : Amnesty International, European Saudi Organisation for Human Rights, Human Rights Watch, ஆகிய அமைப்புகளின் உத்தியோகபூர்வ இணையத்தள தகவல்களை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டது










