மட்டக்களப்பு மாவட்டம் – செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை பிரதேச வைத்திய சாலையில் பொறுப்பு வைத்தியர் திருமதி ஜீவிதா ஷியாம் ரக்கேஷ் தலைமையில் இடம்பெற்றது.
நவம்பர் 14ம் திகதி உலக நீரிழிவு நோய் தினம், அதனையொட்டி பிரதேச வைத்தியாசலையின் நிருவாகம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு என்பன இணைந்து இன்றைய தினம் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு என்பவற்றை முன்னெடுத்திருந்தன.
வைத்தியசாலையில் ஆரம்பித்த குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது செட்டிபாளையம் பிரதான வீதியூடாக செட்டிபாளையம் பாடசாலை வரை சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.அமலநாதன், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு சார்பில் திருமதி மலர்தேவி குருபரன், ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.பரமானந்தம் உட்பட வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரினால் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு விடயங்கள், அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நோயாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டதுடன், அவரால் எழுதப்பட்ட நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு நூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.










