காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டு, நக்கிள்ஸ் மலைப்பகுதியில் உள்ள குகையில் குழந்தையுடன் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி, குழந்தையைப் பிரசவிப்பதற்கு முன்னரும் பின்னரும் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் முன்னதாகக் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளின்போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் இருவரும் மாமன் மற்றும் மருமகன் உறவுமுறையைக் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்களின்படி, 36 வயதுடைய சந்தேகநபர் கடந்த 2023ஆம் ஆண்டு முதன்முதலில் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இளைய சந்தேகநபரும் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரு சந்தேகநபர்களும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல தடவைகள் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
சிறுமி கர்ப்பமடைந்ததையடுத்து, பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தையைப் பிரசவித்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குழந்தையைப் பிரசவித்த பின்னரும் குறித்த சந்தேகநபர்கள் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










