ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பிராங்பேர்ட், இன்சியோன், லாகூர் மற்றும் அஹமதாபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் விமான எரிபொருளை விநியோகிப்பதற்கான நான்கு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி சுமார் 12.97 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அரசாங்கத்தின் தகவலின்படி, போட்டி அடிப்படையிலான கொள்முதல் நடைமுறையின் கீழ் இரண்டு சர்வதேச விநியோக நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நான்கு விமான நிலையங்களிலும் விமான எரிபொருளை விநியோகிப்பதற்கான நிறுவனங்களைத் தெரிவுசெய்ய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் விலைமனுக்களைக் கோரியிருந்தது. இதன்போது மொத்தம் எட்டு விலைமனுக்கள் கிடைத்துள்ளன.
விலைமனுக்களை மதிப்பீடு செய்ததன் பின்னரும், உயர்மட்ட நிரந்தர கொள்முதல் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்ததன் பின்னரும், குறைந்த விலையில் சமர்ப்பிக்கப்பட்ட தகுதியான விலைமனுக்களைத் தெரிவுசெய்து ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நான்கு விமான நிலையங்களுக்குமான இந்த விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி சுமார் 12.97 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அனைத்து ஒப்பந்தங்களும் 2028 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.










