இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அந்தத் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழில் உருவான இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் 820 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளதாகப் பாக்ஸ் ஆபிஸ் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
திரையரங்குகளில் திரைப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் நிலையில், அதன் வெற்றிகரமான திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார். சக்திவாய்ந்த குற்றக் கும்பலொன்று அவரது குடும்பத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, அவர் மீண்டும் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதே திரைப்படத்தின் கதையாக அமைந்துள்ளது.
மேலும், இத்திரைப்படத்தில் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.
இலங்கை உள்ளிட்ட 240 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படத்தைப் பார்வையிட முடியும் என அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.
இதன் மூலம் ‘ஜெயிலர்’ திரைப்படத்தையும் அதன் இரண்டாம் பாகத்தையும் ஒரே தளத்தில் ரசிகர்கள் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.









