பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாகப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 47 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தலை ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டாம் என இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தத் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேகநபரைக் கைது செய்யக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த குறித்த சந்தேகநபரைக் கண்டறிந்து கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னதாகப் பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தத் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து பிரசுரிக்கவோ அல்லது ஒளிபரப்பவோ வேண்டாம் என அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவத்தை இந்தத் தெளிவுபடுத்தலுக்கும் வழங்குமாறும் ஊடக நிறுவனங்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம், குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு முன்னர் விடுக்கப்பட்ட பொதுமக்களுக்கான கோரிக்கை புதிய அறிவித்தலால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.










