வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட 40 வயதுடைய பெண்ணொருவர் ராகமையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ராகம பொலிஸாரால் கின்கெந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகமையைச் சேர்ந்த சந்தேகநபர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆஜராகாமல் சந்தேகநபர் தலைமறைவாகி வந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் இன்று வியாழக்கிழமை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










