‘ஹஸ்தி சேனா’ விசேட நடவடிக்கையின் கீழ், கலாவெவ வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் வனவிலங்குகளின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத வேட்டையாடல் நடவடிக்கைகளைத் தடுப்பதுடன், வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தினரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சட்டவிரோத வேட்டையாடலுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், தோட்டாக்கள், வெடிமருந்துப் பொடி, விலங்குகளைப் பிடிப்பதற்கான கண்ணிகள் மற்றும் ஹக்கா படாஸ் (Hakka Patas) எனப்படும் வெடிபொருள் பொறிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், முயல் இறைச்சி மற்றும் மான்களின் கொம்புகளும் மீட்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளைப் பாதுகாப்பதுடன், மனித – யானை மோதல்களைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘ஹஸ்தி சேனா’ திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத வேட்டையாடல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இவ்வாறான கூட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










