முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு முடக்கி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த சொத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் (Proceeds of Crime Act) கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான சுமார் 4 கோடி ரூபா வைப்பிலுள்ள நான்கு வங்கிக் கணக்குகளையும் இரண்டு சொகுசு வாகனங்களையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னதாக முடக்கியிருந்தது.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் மற்றுமொருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டாவை விடுவித்து, பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே சந்தேகநபர்கள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் முன்னதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள 12 கோடி ரூபா இலஞ்சப் பணம் இதுவரையில் மீட்கப்படாத நிலையில், குறித்த சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.










