எட்டு அத்தியாவசிய நடவடிக்கைகளுக்குத் தீர்வரி அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் நடைமுறை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கட்டாயத் தேவைக்கு மேலும் ஐந்து மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறு சிரமங்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டதுடன், இணையவழிப் பதிவுச் சேவையிலும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.
இதன்படி,
வங்கிக் கணக்குகளைத் திறத்தல்
கட்டட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல்
வாகனங்களைப் பதிவு செய்தல்
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்
காணிகளைப் பதிவு செய்தல்
வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்
நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்
கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய எட்டு நடவடிக்கைகளுக்கே இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தற்காலிக நிவாரணம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










