தெற்கு சூடானின் போர் (Bor) நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் தெற்கு சூடானுக்கான அமைதிப்பணியில் (UNMISS) பங்களிப்பு வழங்கிய 13 பெண்கள் உட்பட 66 இலங்கை அமைதிப்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனைப் பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மருத்துவப் பராமரிப்பு மற்றும் அவசரகால மருத்துவச் சேவைகள் ஊடாக அமைதிப்படைப் பணியாளர்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பை வழங்கியமைக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைதிப்படையினரின் சேவைகள், ஐ.நா. பணியாளர்கள் தமது கடமைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான செயற்பாட்டுத் தயார்நிலையைப் பேணுவதற்கு உதவியுள்ளதாக தெற்கு சூடானுக்கான ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கை (UNMISS) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்களைப் பாதுகாக்கும் ஐ.நா. அமைதிப்பணியின் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு இலங்கை அமைதிப்படையினர் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










