சுமார் 2,000 முதலீட்டாளர்களிடமிருந்து 4 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த நிதியைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கண்டி மற்றும் கொஹுவளையைத் தளமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களின் இரு பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இலாபப் பங்குகளை வழங்குவதாக உறுதியளித்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதி மோசடியில் சுமார் 4 பில்லியன் ரூபா சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 2,000 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரு நிறுவனங்களுக்கும் எதிராக இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய மூன்று பணிப்பாளர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










