சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD தயாரித்துள்ள Fang Cheng Bao Ti7 ரக SUV வாகனத்தின் விற்பனைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் நெதர்லாந்து நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), தனது லேண்ட் ரோவர் டிஃபென்டர் வாகனத்தின் வடிவமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்வைத்த வழக்கைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் ஹேக் மாவட்ட நீதிமன்றம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
BYD நிறுவனத்தின் Ti7 வாகனம், லேண்ட் ரோவர் டிஃபென்டர் வாகனத்துடன் ஒட்டுமொத்தத் தோற்றத்தில் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் JLR நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வடிவமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, இரு வாகனங்களினதும் ஒட்டுமொத்த விகிதாசாரம், வட்ட வடிவிலான வெளிப்புற வடிவமைப்பு, சக்கரப் பகுதிகளின் அமைப்பு மற்றும் ஜன்னல்களின் வடிவமைப்பு ஆகியவற்றில் ஒற்றுமைகள் காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இடைக்காலத் தடையுத்தரவின் பிரகாரம், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் Ti7 வாகனத்தை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனைக்கு முன்வைத்தல், விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு BYD நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தடை Ti7 ரக வாகனத்திற்கு மாத்திரமே பொருந்தும் என்பதுடன், BYD நிறுவனத்தின் ஏனைய வாகன உற்பத்திகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
BYD நிறுவனத்தின் Fang Cheng Bao துணை வர்த்தக நாமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள Ti7, ஏழு இருக்கைகளைக் கொண்ட பிளக்-இன் ஹைபிரிட் SUV ரக வாகனமாகும்.
இந்நிலையில், குறித்த வாகனம் சுயாதீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமைகள் எதனையும் மீறவில்லை என்றும் BYD நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பானது தனது டிஃபென்டர் வாகனத்தின் தனித்துவமான வடிவமைப்பைப் பாதுகாக்க முயற்சித்து வரும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்குச் சட்ட ரீதியான வெற்றியாகக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், முழுமையான விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பாக இது அமையவில்லை என்பதுடன், இது இடைக்காலத் தடையுத்தரவு மாத்திரமே என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தீர்ப்பு வழங்கப்பட்ட காலப்பகுதியில் Ti7 வாகனத்தை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான உறுதியான திட்டங்கள் BYD நிறுவனத்திடம் இருக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சீன வாகன உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தைகளில் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், சீன நிறுவனங்களுக்கும் ஐரோப்பாவின் பாரம்பரிய வாகன உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான அதிகரித்து வரும் போட்டியை இந்த வழக்கு வெளிப்படுத்தியுள்ளது.










