ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள 71 வயதான போல்சனாரோ, நேற்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மகன் கார்லோஸ் போல்சனாரோ சமூக வலைத்தளமான X இல் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவருக்கு குடலில் கிட்டத்தட்ட முழுமையான அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேசிலியாவின் DF Star வைத்தியசாலை வெளியிட்ட தகவலில், போல்சனாரோ வயிற்றுப் பகுதியில் வீக்கம் (Abdominal Distension) ஏற்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் சத்திரசிகிச்சைகள் மற்றும் வைத்தியசாலை அனுமதிகள்
2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது கத்திக்குத்துக்கு இலக்கானதைத் தொடர்ந்து, போல்சனாரோ பலமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பல்வேறு சத்திரசிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சத்திரசிகிச்சை போன்ற ஊடுருவும் மருத்துவ நடவடிக்கைகள் இன்றி ஆரம்பகட்ட சிகிச்சையின் மூலம் பாதிப்பைச் சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவரது மகன் கார்லோஸ் தெரிவித்துள்ளார்.
வீட்டுக் காவலே உடல்நலப் பாதிப்புக்குக் காரணம் என மகன் குற்றச்சாட்டு
2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரேசிலின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த போல்சனாரோ, 2022ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
எனினும், இடதுசாரி அரசியல் சார்புடைய நீதித்துறை தன்னைப் பழிவாங்கும் நோக்கில் இலக்குவைத்துள்ளதாக போல்சனாரோ குற்றஞ்சாட்டி வருகின்றார்.
மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் அவருக்கு மனிதாபிமான அடிப்படையிலான வீட்டுக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது தந்தையின் தற்போதைய உடல்நலப் பாதிப்புக்கு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சூழலே காரணம் என கார்லோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீண்ட நேரம் இயங்க முடியாத நிலை மற்றும் தினசரி அனுபவிக்கும் உளவியல் ரீதியான சித்திரவதைகள் காரணமாக, சிறைச்சூழலில் தனது தந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போல்சனாரோவின் மற்றொரு மகனான ஃபிளாவியோ போல்சனாரோ, கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி லுலாவிடம் தோல்வியடைந்ததாகவும், தேர்தலுக்குப் பின்னர் பிரேசிலிலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










